18/08/2019
புதிய வீடு கட்டுபவர்களுக்கு சில டிப்ஸ்:
மனையை சதுரம் செய்யும் போது மூலை மட்டம் கொண்டு 90 டிகிரி இருக்கும் வகையில் அமைக்க வேண்டும். அஸ்திவாரம் அமைக்கும் போது மண் பிடிமானம் இல்லாத போது கன்சாலிடேசன் செய்து திமிசு கட்டையில் நன்றாக அடித்த பிறகு கான்கிரீட் போட வேண்டும். சாலை மட்டத்தில் இருந்து கட்டிடத்தின் பேஸ்மென்ட் தேவையான அளவு உயரமாக வைக்க வேண்டும்.
கட்டுமானத்தின் போது கவனிக்க வேண்டியவை
கட்டுமானத்தின் போது வாட்டர் லெவல் டியூப் கொத்தனார் பயன்படுத்துகிறாரா என்பதை கவனிக்க வேண்டும். அஸ்திவாரம், பெல்ட், லிண்டல், கான்கிரீட் என அனைத்து நிலைகளிலும் லெவல் டியூப் அவசியம் பயன்படுத்த வேண்டும். செங்கற்களை நனைத்த பிறகே கட்ட அனுமதிக்க வேண்டும். செங்கல் சுவர் ஒவ்வொரு அடுக்காக கட்டும்போதும் முடிவில் குத்து கல்லாக வைத்து கட்டப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
ஒரே நாளில் 5 அடிக்கு மேல் கட்ட அனுமதிக்க கூடாது. இதற்கு மேல் அனுமதித்தால் தரம் குறைந்துவிடும்.
கலவையின் போது மணல், ஜல்லி, சிமென்ட், தண்ணீர் ஆகியவை தேவையான அளவில் கலக்கப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். குறிப்பாக மணலில் வரும் களிமண் கட்டிகள், சிறிய கற்கள் ஆகியவற்றை அகற்றிய பிறகு கலவை போடப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். கதவு, ஜன்னல்களை பொருத்துவதற்கு முன்பாக வாட்டர் லெவல் டியூப் உபயோகிக்கப்படுகின்றதா என்பதை கட்டாயம் கவனிக்க வேண்டும்.
தரையில் வாட்டத்தை வைத்து கிரானைட், டைல்ஸ், மார்பில் ஆகியவை போட வேண்டும். கட்டிடத்திற்கு காலை, மாலை கட்டாயம் தண்ணீர் விடப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மாடிப்படிகள் அல்லது வீட்டின் முன் படிகள் அமைக்கும் போது அனைத்து படிகளும் ஒரே சீரான முறையில் அமைக்கப்படுகின்றதா என்பதை கவனிக்க வேண்டும்.